Blogger Templates

Wednesday, October 27, 2010

தேவனின் சமாதானம் !

டாக்டர். பால் தினகரன்

""உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது""
(யூதா 1:2)
என் அன்பு சகோதர சகோதரிகளே! இன்றைக்கு உங்களுக்கு சமாதானத்தை கட்டளையிடப்போகிறேன் என்று இயேசு கூறுகிறார். இந்த நேரத்திலும் இந்த வார்த்தையை படிக்கிற உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஆண்டவர் தமது சமாதானத்தை ஊற்றப்போகிறார். ஆண்டவராகிய இயேசு, ""சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக"" (யோவான் 14:27). ஏனெனில் அவருக்குள்ளிருக்கும் அதே சமாதானத்தை உங்கள் இருதயங்களில் வைக்கிறார். உங்களுக்குள் இயேசுவின் சமாதானம் இறங்கும். ஏசாயா 9:6-ல் அவருக்கு ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது, அது """"சமாதான பிரபு"" என்ற பெயர். யோபு 25:2-ல் அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார் என்று ஆண்டவரை குறித்து வேதம் இவ்வாறாக கூறுகிறது. பிசாசு இவ்வுலகத்திலே சமாதானத்தை கெடுத்துக் கொண்டேயிருக்கிறான். பிசாசின் கிரியைகளின் மூலம் ஒரு மனிதன் மற்றவரது சமாதானத்தை கெடுத்துக் கொண்டேயிருக்கிறான். ஆனால் ஆண்டவரோ நமக்கு சமாதானத்தை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார்.


பல வருடங்களுக்கு முன்பு ஒரு பிரசங்கியார் ஒரு கூட்டத்தில் இறைவனுடைய ஒப்பற்ற சமாதானத்தை பற்றி பிரசங்கம் செய்தார். அப்பொழுது கூட்டத்தில் ஒருவன் எழுந்து நின்று, போதகரே, நீங்கள் பிரசங்கம் செய்வதற்கு எல்லாம் சுலபம்தான். நான் இப்பொழுது தான் என் மனைவியையும், பிள்ளைகளையும் அடக்கம் செய்துவிட்டு வருகிறேன். எனக்குள் இந்த சமாதானம் இல்லையே என்று கூச்சலிட்டான். இந்த காரியம் நடந்து சில வாரங்களுக்குள் போதகரின் மனைவி மரித்துபோனார்கள். போதகர் கலங்கிப்போனார்! மனைவியின் அடக்க ஆராதனையில் ஆண்டவருடைய பிரசன்னத்தினால் நிரம்பியிருந்தார். அப்பொழுது கூறினார், சில வாரங்களுக்கு முன்பு இதே மேடையில் நான் பிரசங்கம் செய்தபோது, ஒருவர் எழுந்து நின்று நீங்கள் இப்படிப்பட்ட சூழ்நிலைக்குள் இருப்பீர்களேயானால் பிரசங்கம் செய்யமாட்டீர்கள் என்று கூறினார், அவருக்கு நான் சொல்லுகிறேன், இன்றைக்கு நானும் அதே சூழ்நிலையில் தான் இருக்கிறேன், ஆனால் ஆண்டவருடைய பிரசன்னம், சமாதானம் என்னை நிரப்பியிருக்கிறது என்று கூறினார். அந்த சமாதானம் என்னை வாழவைக்கிறது, கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்த நபர் எழுந்துநின்று சமாதானத்தை அருளும் இந்த இயேசு எனக்கு வேண்டுமென்று கூறினான். அவர்தான் சால்வேஷன் ஆர்மீயை ஆரம்பித்த வில்லியம் பூத் அவர்கள்.

ஆம் பிரியமானவர்களே! ஒருவேளை நீங்கள் வாழ்க்கையில் இன்றைக்கு நொந்து போயிருக்கலாம், நான் ஒருநாள் கூட சமாதானத்தோடு இளைப்பாறியதில்லை என்று சொல்லலாம், சமாதானத்தோடு என்னால் படிக்கமுடியவில்லையே, வேலைக்குச் செல்ல முடியவில்லையே என்று வேதனைப்படுகிறீர்களா? ஆண்டவர் இயேசு இன்றைக்கு உங்களுக்கு சமாதானத்தை உருவாக்குவார். நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும் தைரியமாயிருங்கள்! ஒரு ஜனத்துக்காகிலும் ஒரு மனுஷனுக்காகிலும் தேவன் சமாதானத்தை அருளினால் அந்த மனுஷனை யார் கலங்கப்பண்ண முடியும் (யோபு 34:30). எவ்விதமான சூழ்நிலையிலும் நம்மை காத்து வாழவைக்க, சமாதானத்தினால் நம்மை நிரப்ப ஆண்டவர் இயேசுவால் மட்டுமே முடியும். கவலைப்படாதிருங்கள்! ""உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது"" (யூதா 1:2). தேவனைப் பற்றிக்கொண்டு இப்படிப்பட்ட சமாதானத்தை எனக்கும் தாருமென்று கேளுங்கள். அவர் நிச்சயமாய் பூரண சமாதானத்தினால் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிரப்புவார். 

ஜெபம்:

என்னை நேசிக்கும் அன்பு பரமபிதாவே,

இயேசுவின் நாமத்தில் உம்மிடம் வருகிறேன்; என் இருதயம் அடிக்கடி வழுவிப்போகிற இருதயம். அநேக நேரங் களில் சமாதானமில்லாமல் நான் உம்மைவிட்டு வழிவிலகிப்போய்விடுகிறேன். என்னை மன்னியும். இன்று உம் பாதத்தில் என்னைத் தாழ்த்தி ஒப்படைக்கிறேன். நீர் என்னை வழுவாமல் காக்க வல்லவர் என்பதை நன்கு அறிவேன். நீர் எல்லா சூழ்நிலைகளிலும் பூரண சமாதானத்தை எனக்கருளும்; என்னை மோட்சலோகம் கொண்டுபோய் சேர்க்கும்வரைக்கும் வழுவாதபடி காத்து வழிநடத்தப்போவதற்காக உமக்கு ஸ்தோத்திரம். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே.

ஆமென்.

No comments:

Post a Comment